குறி சொல்லுதல், பேய் ஆடுதல்..

வணக்கம் தோழர்களே,

குறி சொல்ல கற்றுத் தாருங்கள் என்று எம்மிடம் கேட்பவர்கள் என்னிக்கை அதிகமாகிவிட்டது. இவர்களுக்கு இந்த பாடல்கள் உதவியாக இருக்கும்.

கோடியா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் குறிப்பான தட்சணமா மாண்பருக்கு
நீடியே பலதேவ கோடியாக நீதியுடன் தாமுரைப்பார் அனந்தமார்க்கம்
வாடியே வையகத்து மாண்பரெல்லாம் வளமையுடன் பலகாலுந் தொழுதிரஞ்சி
தேடியே திரவியங்கள் அனைத்துந்தந்து தீர்க்கமுடன் தான்கொடுத்து நிதிகேட்பாரே

நிதியான மானிடர்மேல் குறிகள்வந்து நினைத்து விளையாடுமது சன்னதங்கள்
பதியான பதிவிட்டு வந்தேனென்றும் பாலகனே தெய்வகன்னி நான்தானென்றும்
துதியுடனே மரத்துமுனி யென்பேரென்றும் துப்புரவாய் எல்லையது பிடாரியென்றும்
மதியான லாடமுனி நான்தானென்றும் மகத்தான சன்னதங்கள் கூறுந்தானே

தானான வம்மனது காளியென்றும் தாக்கான வேல்முருகன் யான்தானென்றும்
கோனான வாடைமுனி யான்தானென்றும் குறிப்பான காட்டேரி யான்தானென்றும்
தேனான திருவேங்கிட பதிதானென்றும் சிறப்பான அங்காள வல்லியென்றும்
மானான கார்த்தவ ராயனென்றும் மகத்தான அனேகவித தெய்வம்பாரே

பாரேதான் தெய்வமது அனேகங்கோடி பாரினிலே மாண்பர்மேல் சன்னதங்கள்
நேரேதான் தெய்வமயல் கொண்டோர்போலும் நேர்மையுடன் பலபலவாஞ் சன்னதங்கள்
கூரேதான் குடிகள்படை சேனைதன்னில் கோஷ்டமிட்டு சன்னதங்கள் மிகக்கொண்டாடும்
வீரேதான் பிராணாய வுட்சாடந்தான் வீரமுடன் தானுரைப்பார் வெகுவாய்த்தானே

தேனேகேள் லாடகவி யனேகஞ்சொல்வார் தாக்கான பரிபாஷை மிகவுஞ்சொல்வார்
மானேகேள் சன்னதங்கள் மிகவுண்டாகி மார்க்கமுடன் திரேகமது நடுக்கல்கண்டு
தேனேகேள் சிதாபாச நிலையில்நின்று தீர்க்கமுடன் வதிதங்கள் மிகவுரைப்பார்
தானேதான் தெய்வமது கொண்டாற்போலே தகமையுடன் பலபிரட்டு பேசுவாரே

பேசுகின்ற வார்த்தைதனை மெய்யென்றெண்ணி பேரான தட்சணத்து மாண்பரெல்லாம்
காசிபணம் நிதியனைத்தும் மிகவுந்தந்து கருத்துடனே குறிமுறைகள் கேட்டாரப்பா
ஆசுகவி சாத்திரங்கள் பார்த்துமென்ன அறிவுகெட்ட மாண்பருக்கு மதியீனந்தான்
தேசுலவு பூந்துடையாய் போகசீஷர் தெளிவுடனே மிகவுரைப்பேன் கேளுகேளே

கேளேதான் தட்சினத்து மாண்பரெல்லாம் கெவனமுடன் குறிகேட்டு மதியுங்கெட்டு
பாளேதான் சாத்திரத்தை மிகப்பாராமல் பாருலகில் மதிகெட்டு குருடராகி
ஆனேதான் அறிவழிந்து மானங்கெட்டு வப்பனே வஞ்ஞான வலையிற்சிக்கி
நாமேதான் போகாமல் நமனுக்காளாய் நாட்டினிலே யிருந்தவர்கள் கோடிகாணே.

இது போகர் பாடல் எமது பாடல் அல்ல, ஆகவே எம்மிடம் இது பற்றி கேளாமல் சந்தேகம் இருப்பின் போகரிடம் கேளுங்கள். மேலும் மாந்திரீகம் என்பது ஓர் குறித்த எல்லை வர மட்டுமே உதவும் அதை தாண்டி மருந்துகள் தான் உடலையும் உயிரையும் காக்கும். முடிந்தால் சித்தர் மருத்துவத்தை கற்க முயலுங்கள்.

நன்றி