பதினெண் சித்தர்

வணக்கம் தோழர்களே/மாணவ மணிகளே,

சித்தர் பாரம்பரியம் பல இரகசியங்கள் உள்ளடக்கிய ஓர் குழுமம், அதில் இருக்கும் உண்மைகளை ஆராயாமல் வெருமனே சில பாடல்களை படித்துவிட்டு அதற்கு அர்த்தம் தேடும் அன்பர்கள் கூட்டம் ஒரு பக்கம், விளக்க உரை எழுதப்பட்ட நூல்கலை கையில் வைத்துக் கொண்டு பேசும் அன்பர்கள் ஒரு பக்கம் என சித்தர் புகழ் என்ற பேரில் வியாபாரம் அமோகமாக நடைபெருகிறது இன்று.

சித்தர்களை பட்டியலிடுவதும் அவர்களின் தளங்கள் என்ற பேரிலும் குகைகள் என்ற பேரிலும் விளம்பரங்கள் கூடிக்கொண்டு செல்கிறது. அதிலும் பதினெண் சித்தர்கள் இவர்கள் தான் என்ற வாதாடும் கூட்டங்கள் அதிகமாகிவிட்டது. சித்தர்கள் கூறினார்கள் என்ற பேரில் பலவிடயங்கள் இன்று செய்யப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது.

அவர்கள் ஏன் அதை செய்தார்கள் என்ற தெளிவே இல்லாமல் அதில் இருக்கும் ஆபத்துக்கள் தெரியாமல் விளையாட்டாக வாழ்க்கையை நாசம் செய்பவர்கள் தான் இன்று அதிகமாகிவிட்டது. இரசமணி முதல் பற்ப செந்தூரங்கள் வரை இன்று போலிகள் அதிகமாகிவிட்டது. ஏன் எப்படி என்ற விளக்கம் எதுவும் தெரியாமால் சித்தர்களின் பெயர்கள் சந்தையில் காய்கறி போல் கூவி விற்கப்படுகிறது.

நாம் பலமுறை பல வாதங்களை முன் வைத்திருக்கிறோம், சோதிடம் தொடர்பாக, முப்பூ தொடர்பாக, சைவ அசைவ உணவுகள் தொடர்பாக, வாசியோகம் தொடர்பாக என பல வாதங்கள் ஆனால் வாதத்துக்கு வருபவர்களின் கடைக்கூற்று விதண்டாவாதம் செய்வதாக எம்மை கூறி செல்வார்கள், காரணம் எந்த வித ஆதாரங்களும் அவர்களிடம் இருப்பதில்லை, பாடசாலை கல்விபோல சித்தர் இலக்கியத்தை படிப்பதும், அல்லது குரு மார்கள் என்ற பேரில் போலிகளிடம் மாணவராக இருப்பதும், ஆச்சிரம வாசிகளிடம் அடிமையாக இருந்தும் பழகிய அவர்களுக்கு உண்மைகளை ஆராயவும் நேரமில்லை, அதை உணரவும் தெளிவில்லை, ஏற்கவும் மனதில்லை என்ற நிலையில் இருக்கிறார்கள். காலம் தொட்டு காலமாக இது மரபாக இருப்பதால் இவர்கள் உண்மைகளை ஆராய முற்படுவதில்லை.

ஆலய வழிபாடு முதல் வீட்டு பூசைகள் வரை மாயையில் சிக்குண்டு கிடக்கும் அனேகருக்கும் இப்பிறவி போல் பல பிறவிகள் காத்துக் கிடப்பது அவரவர் பாக்கியமே..,

இன்று நாம் பார்க்க போவது பதினெண் சித்தர்கள் என்றால் யார் என்பது பற்றி. ஆனால் அது யார் என்று அகத்தியருக்கு கூட தெரியவில்லை என்றால் நாம் எப்படி இன்று அட்டவணைபடுத்துகிறோம்.

சித்தர்கள் என்று நாம் இன்று கூறுபவர்கள் சித்தர்கள் வழியில் வந்தவர்கள் தான் ஆனால் அவர்கள் பிரதானமானவர்கள் இல்லை, அவர்களுக்கு முன்னர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சான்றோர்கள் தான் இந்த பதினெண் சித்தர்கள் என்று போற்றப்படுபவர்கள். குறிப்பாக சொன்னால் மனிதர்கள் தானா என்பதே கேள்விக்குறியாகவே இன்றும் இருக்கிறது.

சரி, இதற்கு சாட்சிகள் தேடுவோம்,.

” பதிவாக சூத்திரத்திற் பாக மாக

சேரப்பா உப்பெடுக்க நன்றாய் சொன்னார்

திறமான பதினெண்பேர் சித்தரெல்லாம்

ஏரப்பா முடிந்தவிடம் வழலை என்றே

இயம்பினா ரல்லாம லென்னைப் போலே”

இது அகத்தியர் முப்பூ சூத்திரம் பாடல் தொகுதியில் இருக்கும் பாடல், அகத்தியர் கூறுகிறார் பதினெண்பேர் மற்றும் சித்தர்கள் எல்லாம் உப்பெடுக்கும் முறையை நன்றாய் கூறினார்களாம் ஆனால் தான் மறைப்பில்லாமல் கூறியதாக இந்தபாடல் முடிகிறது.

“ பகருவாள் விட்டகுறை வேதாந்தங்கள்

பதினெண்பேர் நூல்பார்த்தும் வகைதோனாது”

இதுவும் அது. தெளிவாக அகத்தியர் கூறுகிறார். பதினெண்பேர் செய்த நூல்கள் பார்த்தாலும் பலனில்லை, காரணம் அவை புரியாத பிதிராக இருக்கிறது அதனால் எனது பாடலைப்பார் உனக்கு யோகம் கிட்டும் என்று..!

“என்றேதான் சித்தருக்கு பயந்துயானும்

ஏற்றபடி பாடினேன் மாறாட்டமாக”

அகத்தியர் குருநூல் பாடல் இது. அகத்தியர் சித்தருக்கு பயந்து உண்மையாகப்பாடாமல் மறைப்பாக பாடியதாக கூறுகிறார் சில பாடல் தொகுதியை.

உங்கள் பதினெண் சித்தர் பட்டியலிள் முதலில் இருப்பவர் அகத்தியர் என்றால் அவர் யாரைப் பார்த்து பயந்து பாடினார்.. !

” விடுத்தார்கள் சித்தர்பதி னெட்டு பேரும்

வெவ்வேறாய் நூல் சொன்னார் அனந்தங் கோடி”

இதுவும் அது..

“ சுயம்பாக போகருந்தான் சுருக்கிச் சொன்னார்

சுகமாக பதினெண்பேர் சித்தர் சொன்னார்”

இதுவும் அது..

இப்படி பல பல சான்றுகள் இன்றைய சித்தர் பாடல்களில் குவிந்து கிடக்கிறது. அகத்தியர் முதல் போகர்வரை யாரும் பதினெண் சித்தர் வரிசை இல்லை என்பது மிக தெளிவு, இன்னும் கூறினால் அகத்தியருக்கு கூட அவர்களின் பேர் தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் அவர்களை பட்டியலிட்டிருப்பார்.

இன்று நீங்கள் பட்டியலிட்டு பேசுகிறீர்கள். யார் சொன்னார் என்ற சாட்சியும் இல்லை ஏன் சொன்னார் என்ற புரிதலும் இல்லை.

இது மட்டுமா, அவர்கள் கூறியதாக இங்கு கூறப்பட்டு வியாபாரம் செய்யப்படும் பொருட்களும் அப்படியே தான். இரசமணி முதல் பல விடயங்கள்.. சித்தர்கள் என்றால் என்ன என்ற அறிவே இல்லை, ஆனால் அவர்கள் கூறிய இரகசியங்கள் தெரிகிறது இங்கு பலருக்கும்.

சித்தர்கள் பேரில் சபைகள் குடில்கள் ஆனால் யார் சித்தர் என்ற விளக்கம் கேட்டால் தெரியாது, காவி கட்டியவன் எல்லாம் சித்தன் என்றதால் தான் இங்கு ஆசாமிகள் கூட்டம் கோடிகளில் சொத்து சேர்க்க வழி விடுகிறீர்கள்.

இதன் தொடர்சி நாளையும் வரும்…

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்